"காலம் கருதி யிருப்பர் கலங்காது

ஞாலம் கருது பவர்.

-திருவள்ளுவர்

பூவுலகம் முழுவதும் வேண்டும் என்போர் கலங்காமல் அதற்கேற்ற காலத்தைக் கருதி பொறுத்திருப்பர் என்கிறார்.

Advertisment

மழை பெய்யவேண்டிய காலத்தில் மழை; வெயில் அடிக்கவேண்டிய காலத்தில் வெயில். அதுபோல அருள்புரியவேண்டிய காலத்தில் தெய்வமும் அருள்புரியும்.

சமஸ்தானம் ஒன்றில் அரசு வைத்திய ராக இருந்தார் அடியார் ஒருவர். தினமும் அதிகாலை எழுந்து நீராடி சிவ வழிபாட்டை முடித்து, தன் சிரமத்தைப் பொருட்படுத்தா மல் ஏழை எளியோர்க்கு வைத்தியம் பார்ப்ப தில் தலைசிறந்தவர்.

ஒருநாள் பெண்மணி ஒருவர் தனது பத்து வயது மகனுடன் வந்து, ""ஐயா, கணவரை இழந்தவள் நான். இவன் என் பிள்ளை. பெயர் சொக்கலிங்கம். இவனுக்கு மூலநோய். என்ன வைத்தியம் பார்த்தும் சரியாகவில்லை. நீங்கள்தான் இவனைக் காப்பாற்ற வேண்டும்'' என வேண்டினார்.

Advertisment

cce

""அம்மா, கவலைப்படாதே! பையனை இங்கேயே விட்டுச்செல். என் மகன்போல பார்த்துக்கொள்கிறேன். தெய்வ அருளால் இவன் நோய் குணமாகும். நீ காலணாகூட தரவேண்டாம்'' என ஆறுதல் சொல்லி அனுப்பினார். சிறுவன், அடியாரின் வீட்டிலேயே தங்கி சிகிச்சை பெற்று, மூன்று மாதங்களுக்குப்பின் நோய் முழுவதும் நீங்கி ஆரோக்கியத்துடன் வீடு திரும்பினான்.

முப்பது ஆண்டுகள் கடந்தன. சமஸ்தான மன்னர் இறந்துவிட்டார். சமஸ்தானத்தின் ஆட்சி ஆங்கிலேயர் கைக்குச் சென்றது. ஆட்சிப் பொறுப்பை ஏற்ற ஆங்கிலேய அதிகாரி, மறைந்த மன்னருக்கு ஒரு நினைவுச்சின்னம் எழுப்ப விரும்பினார்.

Advertisment

அதற்காக ஊரிலுள்ள முக்கியஸ்தர்களை வரவழைத்து, ""மறைந்த மன்னருக்காக நினைவுச் சின்னம் எழுப்ப விரும்புகிறேன். உங்களால் இயன்ற தைத் தந்துதவுங்கள்'' என்றார். அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற வைத்தியர், ஒரு லட்ச ரூபாய் தருவதாக வாக்களித்தார். ஊர்மக்கள் "இந்த வைத்தியரால் எப்படி லட்ச ரூபாய் கொடுக்கமுடியும்' என்று பேசிக்கொண்டனர்.

அந்த சமயத்தில் அந்த ஊருக்கு செல்வந்தனாகத் திரும்பி வந்தான் சொக்கலிங்கம். பொதுமக்களின் பேச்சு அவன் காதில் விழ, உடனே தன் காரியதரிசியை அழைத்து, ""அந்த வைத்தியர் மூன்று மாதம் என்னை வீட்டிலேயே தங்கவைத்து மருத்துவம் பார்த்தார். அவரால்தான் நோய் நீங்கி நலமாக இருக்கிறேன். அப்படிப் பட்டவருக்கு இந்த நேரத்தில் நாம் உதவவேண்டும். ஒரு லட்ச ரூபாயை பையில் கட்டி வையுங்கள். இதோ வருகிறேன்'' என்று கூறி வைத்தியரின் வீட்டிற்குச் சென்றான். அப்போது வைத்தியர் அங்கில்லை. வைத்தியரின் கணக்குப் பிள்ளையிடம், ""மன்னரின் நினைவுச் சின்னத்திற்காக லட்ச ரூபாய் தருவதாக வைத்தியர் வாக்களித்தாராமே? அவரால் எப்படி முடியும்?'' எனக் கேட்டான். அதற்கு அவர், ""தெய்வம் எப்படியாவது உதவும் என்ற நம்பிக்கை அவருக்கு அதிகமாகவே உண்டு'' என்றார்.

வைத்தியரின் தெய்வ நம்பிக்கை வீணாகவில்லை. ""சிறுவயதில் என் உயிரைக் காப்பாற்றியவர் அவர். என்னுடன் வாருங்கள்... அவர் கொடுக்க வேண்டிய லட்ச ரூபாயை நான் தருகிறேன்'' என்று கணக்குப் பிள்ளையை அழைத்துச்சென்று, லட்ச ரூபாய் அடங்கிய பையைக் கொடுத்தார். பின்னர் விவரமறிந்த வைத்தியரான அடியார், ""நன்மை செய்தால் நன்மைதான் விளையும் என்பதற்கு இதைவிடவா உதாரணம் வேண்டும்?'' என்றார்.

கலக்கத்துக்கு இடம்தராமல் உரிய காலத்தை எதிர்பார்த்துப் பொறுமையாக இருப்பவர்கள் இந்த உலகத்தையேகூட வென்று காட்டுவார் கள். ஆக, நல்லதைச் செய்தால் தெய்வம் ஏதாவதொரு ரூபத்தில் தேடிவந்து அருள் புரியும். அத்தகைய தெய்வம் குடி கொண்டுள்ள ஒரு திருத்தலம்தான் திருச்செம்பொன்பள்ளியில் உறையும் சுவர்ணபுரீஸ்வரர் திருக்கோவில்.

இறைவன்: சுவர்ணபுரீஸ்வரர், செம்பொன் பள்ளியார்.

இறைவி: சுகந்த குந்தளாம்பிகை, மருவார் குழலியம்மை.

உற்சவர்: சோமாஸ்கந்தர்.

cc

புராணப்பெயர்: திருச்செம்பொன்பள்ளி.

ஊர்: செம்பனார்கோவில்.

தீர்த்தம்: சூரிய தீர்த்தம், காவிரி தீர்த்தம்.

தலவிருட்சம்: வன்னி மரம், வில்வமரம்.

சுமார் 1,600 ஆண்டுகள் பழமைவாய்ந்ததும், தேவாரப் பாடல்பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் 42-ஆவது தலமாகப் போற்றப்படுவதும், திருவிளையாடல் புராணத் திற்குத் தொடர்புடையதும், மூர்த்தி, தலம், தீர்த்தம் எனும் முப்பெரும் சிறப் பு களோடு பல்வேறு சிறப்பு களையும் பெற்றதொரு திருத்தலம்தான் சொர்ண புரீஸ்வரர் திருக்கோவில்.

"வானார் திங்கள் வளர்புன் சடைவைத்துத்

தேனார் செம்பொன் பள்ளி மேவிய

ஊனார் தலையிற் பலிகொண் டுழல் வாழ்க்கை

ஆனான் கழலே அடைந்து வாழ்மினே.'

-திருஞானசம்பந்தர்

தல வரலாறு

பிரம்மாவின் மானச புத்திரனான தட்சன் தன் மகள் தாட்சாயிணியை சிவபெருமானுக்கு மணம்முடித்துத் தந்தான். தனது அகந்தை யால் சிவபெருமானை அழைக்காமல் யாகம் செய்தான். அவனை நல்வழிப்படுத்த தாட்சாயிணி திருப்பறியலூருக்குச் சென்றபோது, சிவனையும் சக்தியையும் நிந்தித்தான் தட்சன்.

தாட்சாயிணி கோபம்கொண்டு தட்சனின் யாகம் அழிந்துபோகட்டுமென்று சபித்தாள். அதேவேளையில் சிவபெருமானானவர் வீரபத்திரர், பத்ரகாளி ஆகியோரைத் தோற்றுவித்து அனுப்ப, அவர்கள் யாகத்தை அழித்தனர். வீரபத்திரர் தட்சனை சம்ஹாரம் செய்தார். தாட்சாயினியும் சிவநிந்தை செய்த தட்சனின் மகள் என்ற பாவம் தீரவேண்டி இத்தலத்தில் பஞ்சாக்ணி மத்தியில் கடுந்தவம் புரிந்தாள். சிவனும் தாட்சாயிணிக்கு கருணைகாட்டி, "சுகந்த குந்தளாம்பிகை என்னும் திருநாமத்துடன் இத்தலத்தில் என்னருகிலிருந்து அருளாட்சி செய்' என்றருளினார்.

சிறப்பம்சங்கள்

✷ இங்குள்ள சிவலிங் கம், பதினாறு இதழ்களைக் கொண்ட தாமரை போன்ற ஆவுடைமீது அமைந் துள்ளது. சுயம்புமூர்த்தியான இவர் சுவர்ணபுரீஸ்வரர் என்னும் திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.

✷ லட்சுமிபுரி, இந்திரபுரி, கந்தபுரி, செம்பொன்பள்ளி என்று பல பெயர்கள் இத்தலத்துக்கு இருந்தாலும், நடைமுறையில் செம்பனார் கோவில் என்றே அழைக்கப் படுகிறது.

✷ சோழ மன்னர்கள் இந்த கோவிலைக் கட்டிப் புனரமைத்ததால் அதற்கு "செம்பியன்' என்ற பெயர் வந்தது. பள்ளி என்றால் கிராமம் என்றொரு பொருளுண்டு. எனவே செம்பியன்பள்ளி எனப்பட்டது. சிவனின் கருவறை கோபுரத்தின் கூரை தங்கத் தாள்களைப் பயன்படுத்தி உருவாக்கப் பட்டதாக கல்வெட்டுச் செய்திகள் கூறுகின்றன. அதனால் திருசெம்பொன்பள்ளி என்றாயிற்று.

✷ இத்தல மூலவர் ஒருகாலத்தில் தங்கத்தைப்போல பிரகாசித்ததால் இறைவன் செம்பொன்பள்ளியார் என்று புகழப் படுகிறார். குலோத்துங்கச் சோழன், ராஜராஜன், சரபோஜி ராஜகாலத்திய ஆறு கல்வெட்டுகள் ஆலயத்தில் உள்ளன.

✷ இத்தல இறைவி சுகந்த குந்தளாம்பிகை, இரண்டு கரங்களே உடையவளாய் நின்றநிலையில் அருள்கிறாள்.

புஷ்பாளகி, தாட்சாயிணி, சுகந்தளாகி, சுகந்தவன நாயகி, மருவார்குழலி என்ற பெயர்களும் உண்டு.

✷ ரதிதேவி தனது கணவர் மன்மதனைத் திரும்பப்பெற வழிபட்ட தலங்களில் திருச்செம்பொன்பள்ளியும் குறிப்பிடத்தக்கது.

✷ இங்கு ஒரு சுவாரசியமான அம்சம் என்னவென்றால், பெண்கள் புதிய நகைகள் மற்றும் ஆபரணங்களை வாங்கியபிறகு முதலில் அவற்றை சுகந்தா தேவிக்கு சமர்ப்பித்த பின்னரே அணிந்துகொள்கிறார்கள். எதிர்காலத்தில் அதிக பொன் நகைகள் சேரும் என்பது அவர்கள் நம்பிக்கை.

✷ காரணாகம விதிப்படி காலபூஜைகள் சரியாக நடக்கும் இவ்வாலயம் தமிழ்நாடு அரசு இந்துசமய அறநிலைய ஆட்சித்துறையின்கீழ், நிர்வாக அதிகாரியின் கண்காணிப்பில் நன்கு இயங்கிவருகிறது.

✷ சித்திரை மாதம் 7-ஆம் நாள்முதல் 18-ஆம் நாள்வரை 12 நாட்கள் காலையில் சூரியனின் ஒளிக்கதிர்கள் மூலவரின்மீது படுவது மிகவும் விசேஷம். இந்த நாட்களில் சிறப்புப் பூஜைகளும், ஒன்பது நாள் பெருந்தேர்த்திருவிழா "சவுர மகோற்சவம்' என்னும் பெயரிலும் கொண்டாடப் படுகிறது.

✷ மகாலட்சுமி இங்கு தவமிருந்து திருமாலைக் கணவராக அடையப்பெற்றதால் இத்தலம் லட்சுமிபுரி என்று பெயர்பெற்றது.

✷ இந்திரன் சூரிய தீர்த்தத்தில் நீராடி சிவனைப் பூஜித்து விருத்திராசுரனை வெல்ல வஜ்ஜிராயுதம் பெற்றதால் இந்திரபுரி என்று பெயர் வந்தது.

✷ முருகப்பெருமான் சிவன் வடிவில் தன் தாய்க்கு நற்போதனைகளை எடுத்துக்கூறினார். இதனால் இங்குள்ள முருகன் கையில் அட்ச மாலையுடன் காட்சிதருகிறார். முருகன் இத்தல ஈசனை வழிபட்டு தாருகனை வதைத்ததால் இத்தலத்திற்கு கந்தபுரி என்ற பெயருண்டு.

✷ தியானப்பயிற்சி செய்பவர்கள் இத்தல இறைவனை வழிபட்டு பயிற்சியை ஆரம்பிப்பது சிறப்பு.

✷ வட்டவடிவமான ஆவுடை யாருள்ள இம்மூர்த்தி திருமாலால் பூஜிக்கப்பட்டவர். சித்திரை மாத அமாவாசையிலும் வைகாசியிலும் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடினால் சகல பாவங்களும் நீங்கி சந்தோஷம் பிறக்கும்.

✷ சிவாலயத்திற்குரிய அனைத்து விசேஷங்களும் நடக்கின்றன. குறிப்பாக சித்திரை மாத சூரியபூஜை, ஐப்பசி அன்னா பிஷேகம், கார்த்திகை தீபம், கார்த்திகை சோமவார சங்காபிஷேகம், மாசி சிவராத்திரி, மார்கழி திருவாதிரை போன்றவை வெகு சிறப் பாக இருக்கும்.

✷ இங்குள்ள சப்தமாதர்கள் மிகவும் பிரசித்தம். மணமாகாத பெண்கள் இந்த சப்தமாதர்களைப் பூஜித்து ஏழு ரவிக்கைத் துண்டுகளை (ஏழு நிறங்களில்) படைத்து, அதை ஏழு சுமங்கலிப் பெண்களுக்கு இனிப்புடன் வழங்கினால் விரைவில் திருமணம் நடைபெறும்; வாழ்வு வளமாகும் என்பது நம்பிக்கை.

✷ திருவிளையாடல் புராணத்திற்குச் சம்பந்தப்பட்ட தலமாதலால் இங்கு பிரதோஷ பூஜை சிறப்பானது. ஒவ்வொரு கிழமையில் வருகிற பிரதோஷத்திற்கும் வெவ்வேறுவிதமான பலன்கள் உண்டு. குறிப்பாக ஞாயிறு பிரதோஷம் மிகவும் உன்னதமாகக் கருதப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை பிரதோஷம்

சூரியனின் ஆதிக்கம் நிறைந்த நாள். பிரதோஷ நேரமான மாலை 4.30 முதல் 6.00 மணிவரையானது ஞாயிற்றுக்கிழமையன்று ராகு காலத்தில் வரும். இதனால் இது சக்திவாய்ந்ததாக உள்ளது. ராகு காலமும் பிரதோஷவேளையும் இணைந்திருக்கும் நேரத்தில் சிவதரிசனம் செய்வதன்மூலம் சிம்ம லக்னம், சிம்ம ராசி, ஞாயிற்றுக்கிழமை பிறந்தவர்கள், சூரியராஜ், சூரியகலா, ஆதவன், ஆதித்தன், ஆதீஷ், நாகலக்ஷ்மி, ராஜலக்ஷ்மி அருண், சூரியவரதன் என சூரியனின் அம்சம் கொண்ட பெயர் உள்ளவர்கள், நாகதேவதைகளின் பெயர் உள்ளவர்கள், சூரிய தசாபுக்தி நடப்பவர்கள், சூரியனுடன் ராகு- கேது இணைந்துள்ளவர்களுக்கு ஜாதகரீதியான தோஷங்கள் நீங்கி, கிரகண தோஷமும் அகன்று தந்தை- மகன், மகள் உறவில் சுமுகம் ஏற்பட்டு சுகமாய் வாழ்வர்.

மேலும், இதயம், வலதுகண் தொடர்பான பிரச்சினைகள் விலகும். அரசுவழி ஆதாயம், அரசியல் பதவி உயர்வு கிடைக்க சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் படைத்துப் பயன் பெறலாம்.

திங்கட்கிழமை பிரதோஷம்

பொதுவாகவே சோமவார பிரதோஷம் விசேஷமானது. கடக ராசி, கடக லக்னம், திங்கட்கிழமை பிறந்தவர்கள், சந்திர தசை, சந்திர புக்தி நடப்பவர்கள், சந்திரனுடன் சர்ப்ப கிரகங் கள் சேர்க்கை பெற்றிருப்பவர் கள் கூடுதல் பலன்களை அனுபவிப் பதோடு, சந்திர தோஷநிவர்த்தி, அவமானத்திலிருந்து விடுபடுதல், ஜலகண்டம் நீங்குதல் போன்ற நன்மைகள் கிடைப்பதோடு மனசஞ்சலம், மனஅழுத்தமின்றி வாழ்வர்.

செவ்வாய்க்கிழமை பிரதோஷம்

மேஷ- விருச்சிக லக்ன- ராசியினர், செவ்வாய்க்கிழமை பிறந்தவர்கள், செவ்வாய் தசாபுக்தி நடப்பவர்களுக்கு ஜனன ஜாதக ரீதியான தோஷமகன்று செவ்வாய் தோஷமும் நீங்கி, மங்கையர்க்கு மாங்கல்ய பலம் கிட்டும்.

புதன்கிழமை பிரதோஷம்

மிதுனம், கன்னி ராசி- லக்னத்தைச் சார்ந்தவர்கள், புதன்கிழமை பிறந்தவர்கள், புதன் தசாபுக்தி நடப்பவர்களுக்கு ஜனன ஜாதகரீதியான தோஷம் நீங்குவதோடு, நீசம் பெற்ற புதனால் வரும் கெடுபலன் அறவே நீங்கும். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவர். புதன்பலம் கிடைக்க பச்சைப் பயறு, சுண்டல் பிரதோஷ வேளையில் வழங்கலாம்.

வியாழக்கிழமை பிரதோஷம்

தனுசு- மீன ராசி- லக்னத்தைச் சார்ந்தவர்கள், வியாழக்கிழமை பிறந்தவர்கள், குரு தசாபுக்தி நடப்பவர்கள், குரு- மகர ராசியில் இருக்கப் பிறந்தவர்களுக்கு ஜனன ஜாதகரீதியான குரு தோஷம் நீங்குவதோடு, பிரம்மஹத்தி தோஷம், குரு சாபம் அகலும். மழலை பாக்கியம் கிட்டும். மூளை, கல்லீரல், மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்களுக்கு நிவர்த்தி கிட்டும். வெகுநாளாக அடமானத் தில் வைத்த நகையை மீட்பதற்கும், குரு கடாட்சம் கிடைக்கவும் வயதின் எண்ணிக்கை அடிப்படையில் பிரதோஷ வேளையில் லட்டு வழங்கலாம். அல்லது 27 எண்ணிக்கையிலும் வழங்கலாம்.

வெள்ளிக்கிழமை பிரதோஷம்

ரிஷபம், துலா ராசி- லக்னத்தைச் சார்ந்த வர்கள், வெள்ளிக்கிழமை (ஆண்குழந்தை பெற்றவர்கள்) பிறந்தவர்கள், சுக்கிர தசாபுக்தி நடப்பவர்கள், சுக்கிரன் கன்னி ராசியில் நிற்கப் பிறந்தவர்கள் வில்வ இலைகளாலும், மூன்றுவகை வாசனை மலர்களாலும் நந்திக்கு அர்ச்சனை செய்து, சர்க்கரைப் பொங்கல் படைத்து வழங்கினால் குடும்பத் தில் ஒற்றுமை அதிகரித்து திருமகள் அருள் கிட்டும்.

சனிக்கிழமை பிரதோஷம்

சனி மகாபிரதோஷம் பன்னிரு ராசியினருக்கும் மிகுந்த பலன்களைத் தரவல்லது. இந் நாளில் வணங்கினால் எல்லா பாவங்களும் நீங்கி இகபர சுகங்கள் கிட்டும். "மேற்கண்ட தகவல்கள் பல ஜோதிடர்கள் ஒருமித்த கருத்துடன் கூறுவதோடு, பலன் கண்டவர்கள் ஏராளம்' என்று பெருமிதத்து டன் கூறுகிறார் முத்துக்குமார குருக்கள். "அர்த்தமற்ற வாழ்க்கை வாழ்ந்துகொண்டி ருக்கிறோமே என்று வாழ்வை ஓட்டுபவர் களுக்கு, அர்த்தமுள்ள வாழ்க்கையாக மாற்றி மறுமலர்ச்சி உண்டாக வழிவகை செய்பவர் தான் இந்த செம்பொன் பள்ளியார்' என்று உறுதியுடன் கூறுகிறார் ஆலய அர்ச்சகரான உமாபதிசிவம் குருக்கள். ஈசர்க்கு எழில்மாடம் எழுபது கண்ட கோச்செங்கட்சோழனால் கட்டப்பட்ட தலமாம்- அப்பர், சம்பந்தரால் பாடப்பட்ட தலமாம்- விசேஷ நாட்களில் மகா தீபாராதனையுடன் அருள்கின்ற தலமாம்- செம்மையான வாழ்வருளும் சிவனார் உறைகின்ற தலமாம் செம்பனார் கோவிலில் உறையும் மருவார்குழலியம்மை சமேத சுவர்ணபுரீஸ்வரின் திருவடி தொழுவோம்; பொன்போல் பிரகாச வாழ்வு பெறுவோம். காலை 7.00 மணிமுதல் பகல் 12.00 மணி வரையிலும்; மாலை 4.30 மணிமுதல் இரவு 8.00 மணிவரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.

ஆலயத்தொடர்புக்கு: நிர்வாக அதிகாரி, சுவர்ணபுரீஸ்வரர் திருக்கோவில், தரங்கம்பாடி வட்டம், செம்பனார்கோவில் அஞ்சல், நாகை மாவட்டம்- 609 309.

அமைவிடம்: மயிலாடுதுறையிலிருந்து திருக்கடவூர் செல்லும் சாலையில் (ஆக்கூருக்கு முன்னதாக) பத்து கிலோ மீட்டர் தொலைவில் பிரதான சாலையில் அமைந்துள்ளது. பேருந்து வசதிகள் நிறைய உண்டு.

படங்கள்: போட்டோ கருணா